இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மகளிர் தின நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தினமான கடந்த 2020.03.08 ஆம் திகதியன்று பசுமைப்பூங்கா வளாகத்தில் நடாத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்கள் தொடர்பில் கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 2020.03.13 ஆம் திகதியன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதே விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமறிக்குமாறு இன்றையதினம் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.