இராணுவத்தினருடன் முரண்பட்டு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உரும்பிராய் பகுதியில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உரிய முறையில் முகக்கவசம் அணியாதிருந்தனர். அதனை சரியான முறையில் அணியுமாறு இராணுவத்தினர் கூறிய போது, இரு தரப்புக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் மூவரும் அங்கிருந்து பயணிக்கும் போது இராணுவத்தினரை நையாண்டி செய்ததாகத் தெரிவித்து துரத்திச் சென்ற இராணுவத்தினர், வழிமறித்துத் தடுத்தனர். மூவர் மீதும் இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சான்றுப்பொருளாக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர்கள் சார்பிலான விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் மூவரும் தலா 2 ஆள் பிணைகளை முன்வைக்கவேண்டும்.

சந்தேக நபர்கள் ஒவ்வொரு வாரமும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் மன்றினால் விதிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir