இனவாதம், மதவாதத்தால் நாட்டை நாசமாக்கியுள்ளனர் ராஜபக்சவினர் – கொதித்தெழுகின்றார் ரணில்

“நல்லாட்சியில் இந்த நாடு இன நல்லிணக்கத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால், தற்போது ராஜபக்சக்களின் ஆட்சியில் இந்த நாடு இனவாதத்தாலும் மதவாதத்தாலும் சீரழிந்துள்ளது. தேர்தல் வெற்றிக்காக ராஜபக்சவினர் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாவற்றையும் அரங்கேற்றி வருகின்றனர்.”

– இவ்வாறு கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

தன்னைச் சந்தித்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இனவாதத்தையும் மதவாதத்தையும் வேரூன்றச் செய்து அதனூடாக பௌத்த – சிங்கள மக்கள் அனைவரையும் தமது பக்கம் இழுப்பதே ராஜபக்சக்களின் குறிக்கோளாக இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிலைப்படுத்தியே வாக்குகளை ராஜபக்சவினர் பெற்றனர். அதைவிட மோசமான வழியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்சவினர் முயற்சிக்கின்றனர்.

எனினும், நாட்டு மக்கள் விழிப்பாக இருப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். குடும்ப ஆட்சிக்கும் எதேச்சதிகார ஆட்சிக்கும் மக்கள் இனிமேல் இடம் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறையின் சிகரங்களாக படையினர் இருக்கின்றார்கள். அவர்களையும் தமது அரசியலுக்குள் உட்புகுத்தி பாதுகாப்புத்துறையின் கெளரவத்தையும் இந்த அரசு குறைத்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் பொதுத்தேர்தலில் மக்கள் பதில் வழங்கியே தீருவார்கள்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir