யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இருபத்து மூன்றாம் அகவைத் திருநாள் கடந்த 2 ஆம் திகதியன்று நடைபெற்றது.
அன்றைய நாளில் கல்லூரியில் எழுந்தருளியுள்ள வித்தக விநாயகர் ஆலயத்திலும், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன. மாலை வேளை கல்லூரி மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரியின் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் கல்லூரி ஆலோசனை சபையின் சிரேஷ்ட உறுப்பினர் டொக்டர்.லயன்.வைத்திலிங்கம் தியாகராஜா பிரதம விருந்தினராகவும், கல்லூரியின் பழைய மாணவரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான திரு.சிவலிங்கம் முரளீதரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள், மாணவர் கௌரவிப்பு, நீண்ட காலம் சேவை புரிந்த கல்வியியலாளர், பணியாளர் கௌரவிப்பு என்பவற்றுடன் இந்த வருடம் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி முனைவர்.திருநாவுக்கரசு கமலநாதன் பெயரில், அதி சிறந்த மாணவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட “தங்கப் பொலிகை விருது” எனும் புதிய விருது வழங்கும் நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த விருது, அது கொண்ட நோக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முனைவர்.திருநாவுக்கரசு கமலநாதன் பெயரில் வழங்கப்படுகின்ற இந்தத் தங்கப் பொலிகை விருதானது, அவுஸ்திரேலியா நியு சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா தலைமையில் அவுஸ்திரேலியாவில் வாழும் கல்லூரியின் நலன் விரும்பிகளான திரு.சிவசாமி குணசிங்கம், திரு. சிவகுருநாதன் ஸ்ரீகுமார் மற்றும் திரு. கமலநாதன் செழியன், திருமதி. ஆதித்தன் துளசி ஆகியோரின் நிதி ஈட்டலுடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்குவதன் நோக்கம் கல்லூரிப் பயிலுனர்களின் ஒழுக்கத்தினையும் கற்றல், கற்பித்தல் மேம்பாட்டினையும் ஊக்குவிக்கும் சீரிய நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. அதற்கமைய இவ்விருதிற்கான விதிமுறைகள் கல்லூரிப் பீடாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு வகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கற்பித்தல் திறமை, புத்தாக்க சிந்தனை, இணைப் பாட செயற்பாடு, நல்லொழுக்கம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
இவ்விருதைப் பெறத் தகுதியானவரை அடையாளம் காணும் முழுத் தகுதியும் பொறுப்பும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதிக்கும் அவரால் கல்லூரியில் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவுக்கும் மட்டுமே உரியது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆரோக்கியமான உயர் விழுமியத்துடனான ஆசிரியர் சமூகத்தினை உருவாக்குவதற்காகவும், மாணவ ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்துவதற்காகவும் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி முனைவர்.திருநாவுக்கரசு கமலநாதனின் நண்பர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து எடுத்த ஒரு முயற்சியாகும்.
