16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
முதலில் துடுப்பாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷிட் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதிரடியாக ஆடிய சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.