முதல் ஆஷஸ் டெஸ்ட் – இங்கிலாந்தா? அவுஸ்திரேலியாவா? பரபரப்பான இறுதி நாள் ஆட்டம் இன்று!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை எடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் சதமடித்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவுஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. உஸ்மான் கவாஜா 141 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 66 ஓட்டங்களும் , டிராவிஸ் ஹெட் 50 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

7 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 4 ஆம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்கள், ஒல்லி ராபின்சன் 27 ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது.

அவுஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ஓட்டங்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply