அமெரிக்க இரகசிய சேவையின் போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தப்பியோடிய சாரதி ஒருவர் வெள்ளை மாளிகை அருகே பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமைக்காக, அதிகாரிகள் காரை நிறுத்தியபோது குறித்த சாரதி காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே, வாகனத்தை ஓட்டிச் சென்று வழியில் பல நபர்களை காரினால் மோதித் தள்ளியதாகவும் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாகவும் அமெரிக்க இரகசிய சேவை தெரிவித்துள்ளது.
சம்பவத்தையடுத்து, சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் 35 வயதுடைய ஸ்பைரோ ஸ்டாஃபிலாடோஸ் எனும் பெயருடையவர் எனவும் அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று, உள்ளூர் நேரப்படி 1:30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை தேடும் பணியில் அமெரிக்க பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஏனையோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இறந்தவர் 75 வயதுடைய வயோதிப ஆண் எனத் தெரிவிக்கப்படுகின்றது.