நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மேத்யூ, செயலாளர், தொழில்நுட்ப அமைச்சகம், பேராசிரியர் எம்.டி. குணவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன ஆகியோர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடினர்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின் படி அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
