படல்கம பிரதேசத்தில் வீடுகளில் வசிப்பவர்களை கைக்குண்டை காட்டி அச்சுறுத்தி பல வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த நபர் ஒருவரும் அவரது மனைவியும் 5 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இரவு வேளையில் குறித்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகளில் கைக்குண்டை காட்டி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவரது மனைவியும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், திருடப்பட்ட பெறுமதியான பொருட்களை விற்பனை செய்து கிடைத்த பணத்திலேயே போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட தங்க நகைகள் தனது மனைவி மூலம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5கிலோ 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டு, சுமார் 700,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வீட்டினுள் இருந்த கைத்தொலைபேசியும் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.