கேலிக்குரிய விடயமென சஜித் விளாசல்!
இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இடைக்கால நிர்வாகக் குழுவை ஆராய நியமிப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவுக்கும் தனது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.
இலங்கைக் கிரிக்கெட் சபையை ஊழல், மோசடிகளில் இருந்து மாற்றுவழிக்குக் கொண்டு செல்ல விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக இடைக்கால நிர்வாகக்குழுவொன்று அவரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பது மட்டுமன்றி, இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும்.
பாடசாலை, சங்கம், கிராமம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை இன்னமும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் நாடாளுமன்றுக்கு அவர் கொண்டுவரவேண்டுமத்.
இடைக்கால நிர்வாகக் குழு சரியா, தவறா? என்பதை ஆராய, அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இது கேலிக்குரிய விடயமாகும்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு மாற்றத்திற்கான வழிமுறையைக் கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பாக பலரிடம் விமர்சனங்கள் இருந்தாலும், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த, ஊழல் அல்லாத நபர்கள்தான் கிரிக்கெட் சபையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், அமைச்சரவை உபகுழுவொன்று ஏதற்கு?
கிரிக்கெட்டில் இடம்பெறும் மோசடிகளை ஆராயத்தான் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜனாதிபதி ஒரு பக்கத்திலிருந்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் இன்னொரு பக்கத்திலிருந்தும் இந்த விடயத்தை இழுத்துக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.
எனவே, ஜனாதிபதி இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும், எனவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
