பத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் விற்கப்படவுள்ளன!

வரலாற்றுப் புராதன பெறுமதியையும் வர்த்தகப் பெறுமதியையும் கொண்ட கண்டி, நுவரெலியா தபாலகங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணைத் தலைவர் சம்பத் ஸ்ரீ லியனகே தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு பிரதான தபால் நிலையம், மாத்தறை, குருநாகல், பத்தரமுல்லை, கொம்பனித் தெரு, அனுராதபுரம், தெஹிவளை போன்ற பகுதிகளிலுள்ள கட்டடங்களில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க தபால் நிலையங்கள் இவற்றுள் அடங்குவதாகவும், இவை மட்டுமன்றி வணிக ரீதியில் மதிப்புமிக்க இன்னும் சில தபால் நிலைய கட்டிடங்களும் விற்பனைக்கான பட்டியலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி தபால் நிலையக் கட்டிடம் 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும் நுவரெலியா தபால் நிலையமும் அதன் காணியும் இன்றும் பிரித்தானிய அரசியின் உரிமத்தின் கீழேயே உள்ளது எனவும் சுட்டிக்காட்டிய அவர், காலி கோட்டை தபால் நிலைய கட்டிடம் 1700 இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது எனவும், இவ்வாறான வரலாற்று மற்றும் தொன்மைமிகு தபால் நிலையங்களையும் வர்த்தக பெறுமதி கொண்ட அலுவலகங்களையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைபெறவிருந்த இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்ட போதிலும், அரச சொத்துகள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிராக மக்களையும் அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனவும் சம்பத் ஸ்ரீ லியனகே மேலும் தெரிவித்தார். (ரெந-19)

You May Also Like

About the Author: digital

Leave a Reply