சிங்கள எதிர்ப்பாளர்களாக தமிழர்களைக் காண்பித்ததன்
விளைவே இது என கோவிந்தன் கருணாகரம் எம்.பி. சாடல்!
நம் நாட்டின் தமிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாகத் தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்புச் செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்றன தமது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 சதவீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்குகின்றன.
அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் இந்நாடுகளைப் போன்றே அவற்றுக்குச் சமமான தொகையைப் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.
நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்புக்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே!, எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். (04)
