இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை எனவும் அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நான் அறிந்தவரையில் திட்டமிட்டபடி ஐனவரி மாதம் 28 ஆம் திகதி நடைபெறும்.
எனினும், அதில் மாற்றங்கள் அல்லது ஏதும் வித்தியாசமான விடயங்கள் நடைபெற இருக்கின்றனவா? இல்லையா? என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால், ஒரு கட்சியினுடைய மாநாடு அறிவிக்கப்பட்டு பொதுச் சபை உறுப்பினர் எல்லாம் அழைக்கப்பட்டு மாநாட்டுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்த பின்னர் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய காரணம் இல்லை.
ஏனென்றால் பொறுப்புள்ள கட்சியென்றால் ஒரு மாநாட்டை நடத்தத் தீர்மானித்து அதற்கு ஒரு திகதியை அறிவித்தால் அந்தத் திகதியில் மாநாடு நடக்க வேண்டும். ஆகையினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மாநாடு நடைபெற வேண்டும் என அவர் பதிலளித்தார்.
