வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவுடன் புயல் தாக்கி வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசுவதாகவும் வீடுகளுக்கு தடைப்பட்ட மின்சார இணைப்புகளை மீண்டும் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் உள்ளூர் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
14,000 த்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மரமொன்று விழுந்து ரயிலின் சாரதிப் பகுதியைத் தகர்த்துள்ளது. ஆயினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சாலைகளில் பனி மூட்டம் இருப்பதாகவும் சிறியளவிலான சூறாவளி வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நூற்றுக்கும் அதிகமான வீடுகளில் இருந்து பாதுகாப்புக் கருதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் முதன்மையான ஹீத்ரூ விமான நிலையம், வானிலை சீரற்ற நிலை காரணமாக 18 விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளமை கவனிக்கத்தக்கது. (04)