மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டம் பேரணியாக சென்று கரவெட்டி பிரதேச செயலகத்தை அடைந்து ஜனாதிபதிக்குரிய மகஜர் பிரதேச செயலாளரிடம் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டது.

இதன்போது அப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் என்பன மூடப்பட்டு கடையடைப்பும் இடம்பெற்றது.

இந்நிலையில், பாடசாலைக்கு செல்லும் வழியில் மதுபான சாலை வேண்டாம், இது இரு குடும்பங்களின் பிரச்சினை அல்ல, உடுப்பிட்டி மக்களின் பிரச்சினை, மதியை போக்கும் மதுவை அனுமதிக்காதே, பிரதேச செயலாளரே நீங்கள் வழங்கிய அனுமதியை இரத்துச் செய், மதிப்பிற்குரிய ஊடகங்களே வடக்கிற்க்கு வரும் ஜனாதிபதியின் காதுக்கு செல்லும்வரை பகிருங்கள், சீரழிக்காதே சீரழிக்காதே, மாணவ சமுதாயத்தை சீரழிக்காதே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்தது.

மகஜரின் பிரதிகள் மதுவரித் திணைக்கள ஆணையாளர், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், கரவெட்டி பிரதேச செயலகம் , கரவெட்டி பிரதேச சபை என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பிரதேச செயலாளர் செயற்பட வேண்டும் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply