நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறு அறிவித்தல் வரை குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பிரதான வளாகத்திலிருந்து விலகி சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் செயற்பாடுகள் வழமை போன்று தொடரும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு நேற்று மாலை 4.00 மணியளவில் உச்சத்தை எட்டியதை அடுத்து, கல் ஓயாவின் கீழ் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்றையதினம் ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், பொல்வத்தை, பஹலலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, கார்த்திவ், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
