புத்தகங்களுக்கு ‘வற்’ வரி விதிப்பது யுனெஸ்கோ அமைப்பின்
‘ஃபுளோரன்ஸ்’ உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளது
புத்தக வெளியீட்டாளர் சங்கத் தலைவர் சமந்த இந்தீவர தெரிவிப்பு
கல்வி, கலாசாரம், அறிவுசார் முன்னேற்றம் உள்ளிட்ட மக்களின் தனித்துவ அபிவிருத்திக்கு உதவும் புத்தகங்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள 18 வீத வற் வரியை இடைநிறுத்துமாறு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த ‘வற்’ அறவிடலுக்கு புத்தக இறக்குமதியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், ஐக்கிய ஐரோப்பிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இது குறித்தான தமது ஆட்சேபனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள அநேகமான நாடுகள் தமது மக்கள் தகவல்களை அறியவும், அறிவை பெருக்கவும் முயற்சிக்கும்போது அந்நாடுகள் அதற்கு உறுதுணையாக இருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கமோ வருமானத்தை அதிகரிப்பதாகக் கூறி இத்துறைக்கு வரி விதிப்பதும் அதன் கடுமையான பின் விளைவுகளை கவனத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வதுமானது முட்டையிடும் கோழியை கொல்வதற்கு சமமாகும் எனவும் சமந்த இந்தீவர குறிப்பிட்டுள்ளார்.
இத்தொழில்துறையானது ஏற்கனவே 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரியை அரசாங்கத்திற்கு செலுத்தி வருவதாகவும், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் ஏனைய புத்தகங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 90 வீத மூலப்பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் செலுத்தும் வெற் வரி மூலமே இந்த வருமானத்தை அரசாங்கம் ஈட்டுவதாகவும் இந்தீவர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெற் அதிகரிப்பை மேற்கொள்வதன் மூலம் இலங்கை அரசாங்கமானது 1950 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட யுனெஸ்கோ அமைப்பின் ‘ஃபுளோரன்ஸ் ‘ உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் இந்த உடன்படிக்கையில் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘புளோரன்ஸ்’ உடன்படிக்கையின்படி இறக்குமதி செய்யப்படுகின்ற கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார பொருட்களுக்கு சுங்க வரிகள் மற்றும் ஏனைய வரிகள் விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான அதன் விதிமுறைகளுக்கு அதில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் கட்டுப்பட்டுள்ளதாகவும் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவர மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (ரெப-47)
