அதிரடிச் சோதனையில் சிக்கிய வர்த்தக நிலையங்கள்! பண்டத்தரிப்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் களத்தில்!

பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரக் குறைபாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தினை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ.யொனிப்பிரகலாதன் தலைமையில்  அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான 245  பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டது.

பிறிதொரு வர்த்தக நிலையத்தில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி, கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

அத்துடன் காலாவதியான உணவுப்பொருட்கள் வைத்திருந்த மற்றுமொரு நிறுவன உரிமையாளருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

சுகநலத்திற்கு ஒவ்வாத நிலையில் காலாவதியான, வண்டடித்த மா, உப்பு போன்றவற்றைக் கொண்டு மிக்சர் உற்பத்தியினை மேற்கொண்டவருக்கு  45 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

அதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கு.பாலேந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, மோசமான நிலையில் உணவகத்தை நடாத்திய இருவரிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும், இருவரும் நீதிமன்றுக்குச் சமுகமளிக்காமையால் இருவரிற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply