பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திங்கட்கிழமை (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பித்துள்ளார்.
அதனையடுத்து, பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நிதியமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிதியமைச்சின் ஒப்புதலுக்குப் பிறகு, உரிய முன்மொழிவு மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க, அதிகாரிகளினால் திருப்திகரமான தீர்மானங்கள் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் மே 27 ஆம் திகதி அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
