சந்தையில் வாங்கப்படுகின்ற அல்லது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிகளவில் புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சையை கொண்டுள்ள தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம். சந்துன் ஹேமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசி, மிளகாய், சீரகம், பருப்பு, கொத்தமல்லி, தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய், வேர்க்கடலை, சோளம் , உலர் உணவுகள், தாவர எண்ணெய்கள், சோயாபீன்ஸ் மற்றும் பால் பொருட்கள் உட்பட நாம் அன்றாடம் உண்ணும் பல உணவுகளில் அஃப்லடொக்சின் வகையை சேர்ந்த கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சைகள் அடங்கியுள்ளமையினால் இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஃப்லடொக்சின் ‘ குடும்பத்தைச் சேர்ந்த ‘அஸ்பகில்லஸ் பிளேவஸ்’ மற்றும்’ அஸ்பகில்லஸ் பெராசிட்டிஸஸ்’ ஆகிய இரண்டு வகை பூஞ்சைகளால் அந்தந்த உணவு வகைகளில் மேற்படி தாக்கம் ஏற்படுவதாகவும், அந்த உணவுகளை எவ்வளவு தான் வெய்யிலில் உலர வைத்தாலோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலோ அந்த பூஞ்சைகள் அழிவதில்லை எனவும் தெரிவித்துள்ள சுகாதார பரிசோதகர் ரத்நாயக்க, அஃப்லடொக்சின் வகை பூஞ்சைகள் மரணத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த வகை அஃப்லடொக்சின் பூஞ்சையின் காரணமாக, பூஞ்சை உள்ள உணவுகளை ஒருபோதும் சாப்பிடாமல் இருப்பதும், அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இது தவிர, சோளம், அரிசி, பயறு உட்பட ஏனைய தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளிலும் இந்த பூஞ்சை இருக்கலாம், எனவே அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். உணவுப்பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பதாலும் அவை பூஞ்சையாக மாறுவதால் அவற்றில் அஃப்லாடொக்சின் வகை புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சைகள் உருவாகலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
