இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் திரும்பிச் செல்லும் போது விமான நிலையத்தில் வைத்து இலங்கை தேயிலையை நினைவூட்டும் வகையில் நினைவுப் பரிசொன்றை அவர்களுக்கு வழங்குவதற்கான யோசனையொன்றை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்துள்ளார்.
அதற்கமைய, ‘சிலோன் டீ’ எனும் வர்த்தக நாமத்தை உலகளவில் பிரபல்யப்படுத்தும் நோக்கில், இலங்கை தேயிலை அடங்கிய நினைவுப் பரிசு இந்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை பெருந்தோட்ட துறையினர், பெருந்தோட்ட சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலை நினைவு பரிசுப் பொருட்களை வழங்கும் மேற்படி யோசனைக்கு தேயிலை தொழில்துறையினரும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான செலவை தேயிலை சபை மற்றும் தனியார் துறையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
