ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்! மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை!

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே தேரர்,  ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர், கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர், ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிக்காய மகாநாயக்கர் மகுலவே விமல தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் –

“2016 ஆம் ஆண்டு, கூரகல ரஜமகா விகாரை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மார்ச் 28 ஆம் திகதி அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர் கடந்த காலங்களில் நாட்டில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக குரல் எழுப்பி வந்துள்ளதுடன், சமூகத்தில் இடம்பெற்ற சில மதவாத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இவர் செயற்பட்டிருந்தார். இலங்கை சமூகத்தில் சில மதவாத சக்திகள் பரவாமல் தடுக்க அரச பாதுகாப்பு தரப்பினருக்கு இவரது ஆதரவு கிடைத்தமையும் இரகசியமல்ல.

கலகொட ஞானசார தேரரின் செயற்பாடுகள் சமூகத்தில் பலராலும் பாராட்டப்பட்டதுடன், நாட்டில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் வழிவகுத்தது என்பது இரகசியமல்ல. மேலும், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டைக் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவியை வகித்து நாட்டில் பொதுவான சட்ட அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு கலகொட ஞானசார தேரர் உழைத்துள்ளார் என்பது தெளிவான விடயமாகும்.

இவ்வாறான நிலையில், அவை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனத்தை செலுத்துவதுடன், வெசாக் புண்ணிய காலத்தை முன்னிட்டும்  கலகொட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டால் அதனை என்றும் அன்புடன் நினைவு கூருவோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply