மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்பவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
மருத்துவத் துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.மதன் ஆகியோர் அங்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டன.
இவ்வாறு ஒரு சூலில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களில் ஒருவருக்கே இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாகும் நிலையில், இயற்கையாகக் கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்தத் தாயார் பிரசவித்தமையானது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான விடயம் என வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் மிக ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியர் க.கலாரஞ்சினி உறுதிப்படுத்தினார்.
தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கும் நான்கு பிள்ளைகளையும் பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார்.
