நாளை (23) முதல் வெசாக் நிகழ்வுகளை காண கொழும்பு நகரிற்கு வருகின்றவர்கள் குப்பைகளால் நகரை மாசுபடுத்த வேண்டாம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு நகரில் பல வெசாக் பந்தல்கள், தானசாலைகள், வெசாக் வலயங்கள் உள்ளன. எனவே, அவற்றை பார்வையிடும் போது, நகரின் தூய்மையை பாதுகாக்க மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான சாலைகளில் உணவு வகைகளை பெறும் போது அவற்றின் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் இடுமாறும், கொழும்பு நகரில் பல நிறுவனங்களினால் அமைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்காரங்களை 27 ஆம் திகதியின் பின்னர் அவசியமாக அகற்றுமாறும் நிறுவன உரிமையாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெசாக் நிகழ்வைக் காண கொழும்புக்கு வரும் போது ஒழுக்க சீலமாக நடந்து கொள்ளுமாறும், பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
