கிராம உத்தியோகத்தர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வைக் காணுமாறும், ஏனைய பொதுச் சேவைகளுடன் முரண்பாடுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதுள்ள பிரச்சினைகளை முழுமையாக விவாதித்து பொதுவான உடன்பாட்டை எட்டுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை (28) ஜனாதிபதி செயலகத்தில் கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டத்தின் போது இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் சேவை அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள விகிதத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவை உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண திருத்தப்பட்ட சேவை அரசியலமைப்பின் அவசியத்தை வலியுறுத்தின.
இதற்குப் பதிலளித்த சாகல ரத்நாயக்க, தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காகக் காத்திருக்கும் வரைவு சேவை அரசியலமைப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் செய்யப்பட வேண்டும் என்றார்.
அறுபத்தொரு வருடங்களாக நடைமுறையில் உள்ள கிராம சேவையாளர் சேவைக்கான முறையான சேவை அரசியலமைப்பை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் அரச விவகாரங்களுக்கு கிராம சேவையாளர் சேவையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ரத்நாயக்க அங்கீகரித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
