மதவாதிகளுடன் இணைந்துள்ள ‘மௌபிம ஜனதா கட்சியிலிருந்து பதவி விலகியுள்ளேன் சரத் அமுனுகம தெரிவிப்பு!

தனது முழு அரசியல் வாழ்நாளில் மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் பயணித்ததில்லை எனவும், மௌபிம ஜனதா கட்சியானது மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் இணைந்து செயற்பட்டதன் காரணமாக தான் அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
சந்தர்ப்பவாதத்தையும் மக்களை ஏமாற்றுவதையும் தான் என்றுமே  ஏற்றுக் கொள்வதில்லை எனவும் தெரிவித்த அவர் மௌபிம ஜனதா கட்சியின் மூலம் நவீன இளைய சமுதாயமொன்றை கவர்ந்தவாறு ஜனரஞ்சக அரசியல் பயணமொன்றை முன்னெடுக்கவே தான்  எதிர்பார்த்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அன்று மட்டுமல்ல இன்றும் நாளையும் கூட மதவாதத்தையும் , இனவாதத்தையும் தான் என்றுமே புறக்கணிப்பதாகவும், தேசபக்தியும் மதவாதமும் இரண்டும் வேறு வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதனால், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பில ஆகியோருடன் மௌபிம ஜனதா கட்சி இணைந்துள்ளமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதாலேயே கட்சியின் பதவிகளை இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறானவர்களுடன் இணைந்து சென்றவர்களின் கதி என்னவாகியது என்பதற்கு உதாரணங்கள் பல இருப்பதாகத் தெரிவித்த அமுனுகம, அவ்வாறானவர்களுடன் இணையும் போது ஓரிருமுறை அல்ல, பலமுறை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மௌபிம ஜனதா கட்சி பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர தலைமை வகிக்கும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply