ஜூன் 3 இல் அனுட்டிக்கப்படும் சர்வதேச சைக்கிள் ஓட்ட தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகத்தினால் ஏற்பாடு செய்த சைக்கிளோட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (02) காலை 7 மணிக்கு மருதமுனையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
ரைடர்ஸ் கழகத்தின் தலைவர் கலீல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு சைக்கிளோட்டம் மருதமுனை பிரதான வீதியில் ஆரம்பமாகி, கல்முனை நகரை சென்று பின்னர் கல்முனை கடற்கரை பள்ளி செல்லும் பிரதான வளைவின் ஊடாக மீண்டும் கல்முனை நகர் வழியாக பாண்டிருப்பு, மருதமுனையை வந்தடைந்து பின்னர் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது பிரதேசத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து தினமும் சைக்கிளை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மாலை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர். எம்.அஸ்மி, டொக்டர் பெளஸாத் உட்பட ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், ரைடர்ஸ் சைக்கிளிங் அணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் தூர இடங்களில் இருந்தும் பலர் வருகை தந்து கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் ஆரோக்கிய வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தி எல்லோருக்கும் இலைக் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வானது சைக்கிள் ஓட்டுதலை கொண்டாடுவோம் சைக்கிள் பாவனையை ஊக்குவித்தலால் ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவதோடு மாசற்ற சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் முன்னோடிகளாவோம். ஆரோக்கியமான காபனற்ற பசுமையான பூமி கிரகத்தின் உருவாக்கத்தில் பங்காளிகளாகுவோம் எனும் கருப்பொருட்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
