ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகாமையில் கட்டடமொன்றை பெற்றுக் கொள்வதற்கு சுதந்திரக் கட்சியின் மைத்ரிபால தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது கட்சிக்குள் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சட்ட நிலைமைகள் காரணமாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் புதிய கட்டடத்திற்கு செல்ல இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்படி அடுத்த சில தினங்களில் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் புதிய கட்டடத்திலிருந்து எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், புதிய கூட்டணியில் இணையும் அனைத்து முற்போக்கு இடதுசாரி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
