கம்பஹா மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டு வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த தலைமையில் கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டமும் கம்பஹா நகரமும் எதிர்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (05) நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எச்.கீர்த்திரத்ன கம்பஹா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான விரிவான மும்முனை வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.
இதேவேளை, நியமிக்கப்பட்ட கூட்டு வழிநடத்தல் குழு இந்த திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தக் குழுவில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனத் திணைக்களம், நெடுஞ்சாலைகள் அமைச்சு, கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்குவர்.
திறம்பட வெள்ளத் தடுப்பை உறுதி செய்வதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால கட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
