நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (08) முதல் அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதன் சமீபத்திய முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
