தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் காரணமாக மேற்படி ஆணைக்குழு மீதான நம்பிக்கை தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியபோது, “தேர்தல் ஆணைக்குழு சார்பில் இனிமேல் முன்னிலையாகப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அதேபோல், தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைகுழுவிற்கு உள்ளது என பிரதம நீதிபதியரசரும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
எப்படியிருப்பினும் பொதுவாக தேர்தலை நடத்த வேண்டும் என்றே அனைவரும் கூறி வருகின்றனர். தேர்தல் ஆணைக்குழுவில் பலவகையிலும் அரசியல் தலையீடுகள் உள்ளன. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இன்னுமொருவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. எனவே, இந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு நாலாபுரத்திலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விரைவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. அதனால்தான் இதனை கூறுகின்றேன்”, என்றார்.
