இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் 40 வயதான மாத்தறை, ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சுமார் 15 வருடங்களாக சேவையில் இருப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரவு பணியை முடித்துக் கொண்ட குறித்த நபர், தனது கால்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் வருகை முனையத்தின் குளியலறையில் பயணி ஒருவரிடம் இருந்தே குறித்த தங்க பிஸ்கட்களை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தங்க பிஸ்கட்டுகளை விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே எடுக்க 60,000 ரூபாய் பணம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் நடத்திய ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
