மகனைக் கொடூரமாகத் தாக்கி வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன் கைது!

ஊவா பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தை நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா தோட்டம், மேல் பிரிவு, உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றார் எனவும், கணவனுக்குத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தால் குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து இமோ தொழில்நுட்பம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் எனவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது எனவும், அக் குழந்தையை  வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வெலிமடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஊவா பரணகம பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply