கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார்.
பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில் இவர் சாதனை படைத்துள்ளார்.
குறித்த சிறுவன் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள், உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள், உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனை பொருட்கள் என 1098 உருவ படங்களை அடையாளம் காட்டியுள்ளதுடன் பெயர்களை மனப்பாடமாக கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை பெயரை பதிவு செய்துள்ளார்.
சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கி பாராட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் 3 வயது சிறுவனின் ஞாபகத் திறனையும் அவரது சாதனையையும் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
