ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் புதிய முதலீடுகளை ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
பிங்கிரிய ஏற்றமதி வலயம் முழுமைபடுத்தப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்ப்பதோடு, 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளன.
இதன்போது பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும்டாங்சிங் இண்டஸ்ட்ரியல் & கொமர்ஸ் கோ. லிமிடெட். நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நிறுவன வளாகத்தை மேற்பார்வை செய்ததோடு, ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலீட்டுச் சபையின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் உரிமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றதோடு, இந்த செயலாக்க வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் பின்னர் பிங்கிரிய, தும்முல்லசூரிய, மாதம்பை உள்ளிட்ட பிரதேசங்களை மாநகர தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை விடுத்தார்.
விவசாயம், உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி உள்ளிட்ட ஐந்து துறைகளின் கீழ் பிங்கிரியவை பொருளாதார வலயமாக மாற்றுவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.