திருகோணமலை, வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் பணமாக இலஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார்.
ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இலஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 15ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரைக் கடமை நேரத்தில் பரிசோதித்த மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10 ஆயிரம் ரூபா கேட்டிருந்தார். உடனடியாக 5 ஆயிரம் ரூபா கொடுத்து விட்டுப் புறப்படட அந்த நபர், மீதித் தொகை 5 ஆயிரம் ரூபாவை நேற்று மாலை 7.20 மணியளவில் கொடுக்கும்போது இலஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.