பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது மக்களை தவறாக வழி நடத்தும் செயல் எனவும், அரசியலமைப்பு ரீதியாக குறித்த தினங்களில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் குறித்த திகதிகளில் நடத்தப்படாவிட்டால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது, “ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குரிய அதிகாரம் தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தருணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகளில் மாற்றம் நிகழும், அவ்வாறாயின் அது அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும். அரசியலமைப்பை மீறுவதற்கு எவராலும் முடியாது. அதனால் தான் பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம் என கூறுகின்றோம். அரசாங்கம் அன்று தொடக்கம் இன்று வரை அந்த பொய்யையே பரப்பி வருகின்றது. இவ்வாறன பொய்களை கூறி மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள். எனவே, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகும். எந்தவொரு தேர்தல் வந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றி பெறும்” – என்று குறிப்பிட்டார்.
