இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களனிவெளி பெருந்தோட்டத்துக்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
களனிவெளி பெருந்தோட்டத்துக்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்தார் எனக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையிட்டு இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நீதிபதி ஜயமினி அம்பகஹவத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சட்டத்தரணி பாலித சுபசிங்க மற்றும் சட்டத்தரணி சுரேஷ் கயான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவர் சார்ந்த ஏனையவர்களுக்கு இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகை தரும்படி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று குறித்த வழக்குக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தரவில்லை என்பதால் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்ததையடுத்து தகவல்களைப் பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த வழக்கின் பிரதான சந்தேகநபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாக்கும்படி உத்தரவிட்டார்.
