தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்துக்குக் காண்பிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் .
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தியாகி திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டு இருக்கின்றது. எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.
அந்தத் தீர்வை நோக்கிய பயணமாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஐனாதிபதி வேட்பாளராகத் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.
ஜனாதிபதியாக வருவதல்ல எனது நோக்கம். இந்தத் தேர்தல் மூலம் எமக்கான தீர்வைப் பொற்றுக்கொள்ளத் தமிழர்களாகிய நாம் ஒற்றுமையா இருக்கின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காகப் போட்டியிடுகின்றேன்.
எமது மக்கள் நேர காலத்துடன் பெருவாரியாகச் சென்று வாக்களிப்பதன் ஊடாக எமது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.
தற்போது ஒரு சிலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அவற்றை அவதானித்தால் தமிழர் பற்றியோ, அவர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வு பற்றியோ எதுவும் இல்லை.
அபிவிருத்தி, ஒரே நாட்டுக்குள் தீர்வு, சமத்துவம் என்று கூறுகின்றார்கள். சமத்துவம் என்றால் என்ன? இந்த நாட்டில் தமிழன் ஐனாதிபதியாக வர முடியுமா? இதுதான் இந்த நாட்டின் சமத்துவமாகும்.
இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக நான் ஐனாதிபதியாக வருவது நோக்கமல்ல. ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தைக் காண்பிப்பதே நோக்கமாகும். ஒற்றுமையின் பலம் தமிழ் மக்களை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்லும்.” – என்றார்.