கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகளையும் கடந்து இன்று அதிகாலை சென்னை செல்லும் விமானத்தில் தலைமறைவாக செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கால்சட்டை, சட்டை மற்றும் செருப்பு அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் கிராண்ட்பாஸில் வசிக்கும் 23 வயதானவர் எனவும், அவர் சென்னையில் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு இரண்டு முறை வெளிநாடு சென்றுள்தாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபரிடம் பயண ஆவணங்கள் அல்லது போர்டிங் பாஸ் எதுவும் இல்லாததைக் கண்டறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரின் சகோதரரை தொடர்பு கொண்டு விசாரித்ததை அடுத்து சந்தேக நபர் மனநல சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் சுமார் ஒரு மாதமாக மருந்து உட்கொள்ளவில்லை எனவும் அறிந்துக்கொண்டனர்.
விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநல மருத்துவரிடம் ஒப்படைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.