நாட்டின் பல இடங்களில் மழை- இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை குறித்து சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறுகையில், வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்ததாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி செல்லுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு , வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுவதோடு வட மாகாணத்தின் சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. அத்துடன் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய, சப்ரகமுவ,தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

மேலும் திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். அத்துடன் திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும் என கூறப்படுகிறது.

மேலும் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் கூறப்படுன்கிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply