முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13), 116 போலீஸ் உத்தியோகத்தர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்பட்ட மொத்த பணத்தொகை பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மட்டும் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.
