யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது.
இவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் (02) கைது செய்யப்பட்டனர்.
அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன், இளைஞர் ஒருவரையும் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.
இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தார்.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
