சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்த தகவல்!

சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதாவது,

சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (Human Metapneumonia) பயப்பட வேண்டிய ஒன்றல்ல. மனித மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது புதிய வைரஸ் அல்ல. பொதுவாக சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும்.

குளிர்காலத்தில் சுவாச நோய்த் தொற்றுகள் பொதுவானவை என்பதால், இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் பரவலாம் என்று தெரிவித்துள்ளதோடு இதன் தாக்கம் பொதுவாக ஒரு வாரத்திற்குள் குறைவடையும் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (Human Metapneumonia) தொடர்பான பிரச்சனையான சூழ்நிலை இலங்கையில் பதிவாகவில்லை என இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் சுகாதார அதிகாரிகள், பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ் தாக்கமே தற்போது சுவாச நோய்கள் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பதுடன், இந்த நிலைமை பொதுவான சுவாச நோய்கள் பரவுவதைப் போன்றதே தவிர குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், தற்போதைய சுவாச நோய்களின் அலை முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலைகளில் நோயாளிகள் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply