சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அங்கு மனித மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது.
இந்த வைரஸினால் சீனாவில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சீனாவில் பரவி வரும் இந்த வைரஸ் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையாக உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இருவருக்கு மனித மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை, கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவிலேயே மற்றுமொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் தொற்று பாதிப்புகளில் அசாதாரண பரவல் அறிகுறி எதுவும் இல்லை என இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்ததுடன், சுவாச நோய்களை கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.