ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மட்டக்களப்பு கடலில் நீராடச் சென்ற வேளை அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, ரஷ்ய நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் இன்று (10) காலை மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் நீராடிய போது கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய ரூக் கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.