ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்ட விவகாரம்- CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக அமைச்சர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியதோடு, அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக முன்னரே, பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் உட்பட பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்குச் சென்று அதிகாரிகள் சிலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

எனினும், சபை முதல்வர் காரியாலயத்தில் இருந்து வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவே ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் பதிவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில், இது தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக பாராளுமன்ற பதிவு அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட பலர் நாளை (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply