இலங்கை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்தமையால், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

13 இந்திய மீனவர்களுடன் படகொன்று பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில், இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய முயற்சித்தார். இதன்போது இலங்கை கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு இந்திய மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

அவ்வேளையில், ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட போது இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இரண்டு மீனவர்களுக்கு காயம் என்பதால் கைதான இந்திய மீனவர்களை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply