அரசாங்கம் ஊழலுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாடை முவைத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதாக பேச்சளவில் மாத்திரமே குறிப்பிடுகிறதே தவிர நடைமுறையில் எதனையும் செய்யவில்லை. எனவே நடைமுறைக்கு சாதகமாக அமையும் திட்டங்களை செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
அரிசித் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணங்கள் சிறுப்பிள்ளைத்தனமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 20 இலட்சம் பேருக்கு தலா 20 கிலோகிராம் அரிசியை வழங்கியதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் உட்பட முழு அரசாங்கமும் குறிப்பிடுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோகிராம் அரிசியை 20 இலட்சம் பேருக்கு வழங்கியமையால் மொத்த அரிசி உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களுக்கு விநியோகித்த அரிசியை காட்டிலும் 3 மடங்கு தொகை அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது.
பெரும்போக விவசாய நெல் அறுவடையை தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு 5000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. மற்றும் அரிசி இறக்குமதி செய்து அதனூடாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் திரட்டியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இருப்பினும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எவ்விதத்திலும் தீர்வு கிடைக்கவில்லை.
ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடந்த அரசாங்கம் வி.எப்.எஸ் விசா முறைமையை அறிமுகப்படுத்தியது. இதனூடாக பல பில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பில் நீதிமன்றம் தனது பொறுப்பினை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை.
துறைமுகத்தில் இருந்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக அவதானத்துடன் பௌதீக மற்றும் ஸ்கேன் முறைமையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தி சிவப்பு முத்திரை பதிக்கப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த முறையற்ற செயற்பாட்டின் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.