
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் இன்று (27) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிதி ஒதுக்கங்கள் உள்ளிட்ட நிதி அமைச்சின் ஒதுக்கங்கள் மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் குழுநிலை விவாதம் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் அன்று மாலை இடம்பெறவுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 7 நாட்கள் நடைபெற்று, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.